உள்ளூர் செய்திகள்

உடுமலை அருகே சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு

Published On 2024-01-21 05:35 GMT   |   Update On 2024-01-21 05:35 GMT
  • ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.
  • கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.

குடிமங்கலம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.

மாட்டுப்பொங்கலன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளை கையில் வைத்து சலங்கை மாடுகளுடன் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வந்து உருமி இசைக்கேற்ப ஆடுகின்றனர்.

பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது கோவிலில் வைத்து பால், பழம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்களை தொடர்ந்து பாடும் போது சலங்கை மாடுகள் தானாகவே சென்று பால், பழம், பொங்கல்களை சாப்பிடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குடிமங்கலம் அருகே பண்ணைகிணரில் கிராமமக்கள் பொது இடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News