உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வாக்காளர்களை கவரும் கலைநிகழ்ச்சிகள்

Published On 2024-04-02 14:42 IST   |   Update On 2024-04-02 14:42:00 IST
  • வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாள் அன்று தவறாமல் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

திருப்பூர்:

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் பங்கேற்ற பேரணி திருப்பூரில் நடைபெற்றது. அதனை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிறிஸ்து ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: -

பாராளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர்அரசு கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 26.3.2024 அன்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம்குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கரப் வாகனங்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை பயணிகள் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறுபடம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 29.3.2024 அன்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மேலும் அரசுப்பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று திருநங்கைகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. வாக்களிக்கும் உரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஊரில் உள்ளவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றுமல்லாமல்

அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாள் அன்று தவறாமல் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , உதவி கலெக்டர் (பயிற்சி) ஹிறிதியா எஸ்.விஜயன், வாக்காளர் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் குமாரராஜா, மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சி தாதேவி மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News