உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் ஊத்துக்கோட்டை நகரம்

Published On 2022-09-12 17:05 IST   |   Update On 2022-09-12 17:05:00 IST
  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் அமைந்துள்ளது.
  • ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் மாதவரத்தில் இருந்து திருப்பதி, கடப்பா போன்ற பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, துணி, சிமெண்ட், இரும்பு, மருந்து கடைகள் மற்றும் பெட்டிகடைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் சென்னையில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் தினந்தோறும் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கின்றன.

ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு டெப்போவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கின்றன.

மேலும் ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் மாதவரத்தில் இருந்து திருப்பதி, கடப்பா போன்ற பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகள் சவுடுமணல், கிராவல் லோடுகளுடன் வந்து செல்வதால் ஊத்துக்கோட்டை நகரம் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் வாகன நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் ஊத்துக்கோட்டையில் இருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்சுகளும் நெரிசலில் சிக்கி கொள்வதால் நோயாளிகள் சிலர் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் உற்பத்தியாகும் ராக்கெட் உதிரி பாகங்கள் கனரக வாகனங்கள் மூலம் ஊத்துகோட்டை வழியாக ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்த வாகனங்களும் ஊத்துக்கோட்டையில் வாகன நெரிசலில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை யில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெளிப்புற சாலை அமைக்க வேண்டும் அல்லது அம்பேத்கார் நகரில் இந்து அண்ணாநகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News