உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை கொள்ளை- வடமாநில வாலிபர் கைது

Published On 2023-05-07 12:31 IST   |   Update On 2023-05-07 12:31:00 IST
  • கேமராவில் வடமாநில வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.
  • அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை வடமாநில வாலிபர் திருடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் நல்லூர் செவந்தாம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்றிரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை சென்று பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவில் அலுவலக அறையில் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 12 பவுன் தங்க நகை திருட்டு போய் இருந்தது.

இது குறித்து உடனடியாக அவர் நல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கேரகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் வடமாநில வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.அங்குள்ள ஜீவாநகர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வடமாநில வாலிபரின் உருவத்தை வைத்து அங்கு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் திருடிய வாலிபர் போலீசில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு கோவிலை பூட்டி விட்டு சென்றதும் கோவிலுக்குள் புகுந்த அந்த நபர் அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மற்றும் அலுவலக அறையில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடியதுடன் அதனை வீட்டிற்கு எடுத்து சென்ற அவர், அதனை மூட்டை கட்டி வீட்டின் கழிப்பறையின் மேல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் நகை மற்றும் பொருட்களை மீட்டனர். தொடர்ந்து அந்த நபர் வேறு ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை வடமாநில வாலிபர் திருடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News