வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை-வேலூரில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள்
- பஸ் நிலையங்களில் பக்தர்களை சிரமம் இல்லாமல் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
வேலூர்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
இதனையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பதிக்கு 354 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் சென்னை மற்றும் வேலூரில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்பட உள்ளது.
இதற்காக கூடுதலாக போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், திருமலையில் உள்ள ராம் பகிதா விடுதி வளாகம், பாலாஜி பஸ் நிலையம் திருப்பதி ஏழு குண்டல வாடு பஸ் நிலையங்களில் கூடுதலாக மேலாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பஸ் நிலையங்களில் பக்தர்களை சிரமம் இல்லாமல் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்கள் வைகுண்ட ஏகாதசி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இயக்கப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அதற்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.