உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தெப்ப உற்சவம்- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

Published On 2023-03-08 06:25 GMT   |   Update On 2023-03-08 06:25 GMT
  • 12-ம் திருவிழாவான இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வருகிறது.
  • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள், கோவில் இணை ஆணையர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசிப்பெரும் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

11-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜை நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி வந்து சேர்ந்தது. அங்கு இரவு 10:30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

12-ம் திருவிழாவான இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல் அங்கு இரவு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்குப்பின் 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News