உள்ளூர் செய்திகள்

குழந்தை கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

Published On 2024-03-20 08:10 GMT   |   Update On 2024-03-20 08:10 GMT
  • தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை.
  • குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது34). இவர் தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு சந்தியா தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

இது தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தியது ஆலங்குளம் அண்ணாநகர் தெருவை சேர்ந்த சாமி என்ற கருப்பசாமி (47), ஆலங்குளம் கரும்பனூரை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் சந்தியாவின் குழந்தை தவிர மேலும் 3 குழந்தைகளை கடத்தியது தெரியவந்தது. இவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மற்றும் திருவிழாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதற்காக அவர்கள் முன்கூட்டியே ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டறிந்துள்ளனர். பின்னர் குழந்தையை கடத்திச் சென்று, இந்த குழந்தை மலைப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தை. அவர்களால் குழந்தையை வளர்க்க முடியாததால், கொடுப்பதாக கூறி விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அவர்கள் மீட்டனர்.

இதில் சந்தியாவின் குழந்தை மற்றும் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட 3 குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 பேர் மீது சிறார் குற்ற தடுப்பு சட்டம் 80, 81, 84 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 363 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட தனிப்படையினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

Similar News