உள்ளூர் செய்திகள்

பெற்ற தாயை நடுரோட்டில் வீசிவிட்டு சென்ற ஆந்திர வாலிபர்

Published On 2024-02-03 11:53 GMT   |   Update On 2024-02-03 12:04 GMT
  • டி.எஸ்.பி., உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
  • திருச்சி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

திருவெறும்பூர்:

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் பஸ் நிலையம். இதில் பயணிகளின் இருக்கை பகுதியில் ஒரு பெண் கை, கால் செயல் இழந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கேயே படுத்து கிடந்தார்.

இந்த பெண்ணால் எழுந்து அருகில் உள்ள பாத்ரூம் செல்ல முடியாததால் அங்கேயே அணைத்து செயல்களையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பயணிகள் இருக்கை பகுதி மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறவே பயணிகள் சாலையில் நின்று பஸ் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மனித நேயம் அன்பழகன், சமூக வலைதளத்தில், இப்பெண் குறித்து பதிவிட்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.

இதனை அறிந்த திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன், உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க திருவெறும்பூர் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து காவலர்கள் ஜான்சன், பிரபு ஆகியோர் திருச்சி மாநகராட்சி அலுவலர் சிவக்குமார் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு சுத்தப்படுத்தி புதிய ஆடை அணிவித்தனர்.

பின்னர் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

இந்த பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் மனைவி ராஜேஸ்வரி (வயது 50) என்பதும், அவருக்கு ஒரு கை, கால் செயல் இழந்தவுடன், பராமரிக்க முடியாமல் கல் நெஞ்சம் கொண்ட அவரது மகன் இங்கே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

உடனடி நடவடிக்கை எடுத்த டிஎஸ்பிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News