உள்ளூர் செய்திகள்
குப்பை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து
- நகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருத்தணி:
திருத்தணி நகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சியில் ஒரு நாளைக்கு, சராசரியாக 10 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிக்காக நகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் ஆட்டோவில் எடுத்து வந்து கொண்டிருந்தனர். அரக்கோணம் சாலையில் இருந்து வாரியார் நகருக்கு செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஊழியர்கள் இருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.