திருத்தணி அருகே திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பஸ் மோதல்- 2 பேர் பலி
- திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் பஸ் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பலியான 2 பேரின் உடல்களும் சாலையின் நடுவே கிடந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி:
திண்டிவனம் அடுத்த அன்டபட்டு கிராமத்தை சேர்ந்த சீதாராமன் (வயது20), நாராயணன் (45) உள்பட 37 பேர் குழுவாக கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
அவர்கள் நேற்று இரவு 11 மணி அளவில் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சீதாராமன், நாராயணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் உடன் சென்ற பக்தர்கள் முகேஷ் கண்ணன், வடிவேல் அழகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
பலியான 2 பேரின் உடல்களும் சாலையின் நடுவே கிடந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. உடல்களை போலீசார் மீட்ட பின்னரே போக்குவரத்து சீரானது.
விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் பார்த்து உடன் வந்த மற்ற பக்தர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்து. திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் பஸ் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.