உள்ளூர் செய்திகள்

திருத்தேரி - பாரேரி இடையே சிக்னல் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-10-10 16:41 IST   |   Update On 2022-10-10 16:41:00 IST
  • திருத்தேரி-பாரேரி இடையே சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • போதாக்குறைக்கு குறுக்கும் நெடுக்குமாக இருசக்கர வாகனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் செல்வதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

சிங்கப்பெருமாள்கோவில்:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி கிராமம். இதற்கு எதிரே உள்ளது பாரேரி கிராமம். இந்த 2 கிராமங்களுக்கு மத்தியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 6 மாதங்களுக்கு முன்னர் 8 வழிச்சாலை பணிக்காக சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த பகுதிகளில் தென்மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வீடு எடுத்து தங்கி ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் காலை, மதியம், இரவு என சுழற்சி முறையில் பணிக்கு செல்கின்றனர். இவர்கள் மட்டும் அல்லாமல் திருத்தேரி, பாரேரி கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாகவே காணப்படும்.

தற்போது 8 வழிச்சாலையில் யாரும் சாலையை கடக்காத வண்ணம் இரும்பு தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவோ, நின்று சாலையை கடக்கவோ நடைபாதை கிடையாது. இந்த நிலையில் வாகனங்கள் பயங்கர வேகத்தில் வருவதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. போதாக்குறைக்கு குறுக்கும் நெடுக்குமாக இருசக்கர வாகனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் செல்வதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

இந்த வழியாக பல அரசு அதிகாரிகளும், போலீசாரும் செல்கின்றனர். பொதுமக்கள் பலர் புகார் கூறியும் இதுநாள் வரை இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை, ஒரு சிக்னலும் அமைக்கவில்லை பொதுமக்களின் மீது அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவுக்கு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News