உள்ளூர் செய்திகள்

திருச்சுழி அருகே கொள்ளையன் சரமாரி வெட்டிக் கொலை

Published On 2023-04-05 12:00 IST   |   Update On 2023-04-05 12:00:00 IST
  • திருட்டு நகை-பணத்தை தர மறுத்த கொள்ளையனை கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் திருச்சுழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • பகவதி கொலை செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி சாரதா திருச்சுழி போலீசில் புகார் செய்தார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தைச் சேர்ந்தவர் பகவதி (வயது 47). இவர் வேலைக்கு செல்லாமல் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. பகவதி பெரும்பாலும் வடமாநிலங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

இவரிடம் அம்மன் பட்டியைச் சேர்ந்த அஜித் என்ற விக்னேஸ்வரன், கண்ணார்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மறை குளத்தைச் சேர்ந்த பாலக்குமார் ஆகிய 3 பேர் அடிக்கடி மிரட்டி திருட்டு நகை பணத்தை பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை பகவதி தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அஜித், மணிவண்ணன், பாலகுமார் மற்றும் சிலர் பகவதியை மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.காத்தான்பட்டி பெரியண்ணசாமி கோவில் சமையல் கூடம் பின்புறம் பகவதி அழைத்துச் சென்ற அந்த கும்பல் அங்கு வைத்து திருட்டு நகை-பணத்தை தருமாறு கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் வாள் மற்றும் அரிவாளால் பகவதியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பகவதி கொலை செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி சாரதா திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை அரிவாளால் வெட்டிக்கொன்ற அஜித், மணிவண்ணன், பாலகுமார் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

திருட்டு நகை-பணத்தை தர மறுத்த கொள்ளையனை கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் திருச்சுழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News