ஒரு மாதமாக விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கருப்பன் யானையை விரட்ட கும்கியுடன் வனத்துறையினர் விடிய, விடிய தேடுதல் வேட்டை
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
- ராஜவர்தன், மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் கருப்பன் என்ற பெயரிட்ட அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.வனவிலங்குகள் அவ்வப் போது உணவு தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 1 வருடத்துக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.
அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.
அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன், மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் கருப்பன் என்ற பெயரிட்ட அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
அதேப்போல ஆசனூர் வனச்சரகத்தில் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானையை விரட்ட சின்னத்தம்பி,ராமு என இரண்டு கும்கி யானைகள் ஆசனூரில் நிறுத்தப்பட்டு துரத்தப்பட்டு வருகிறது.
தற்போது கடந்த 1 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உப்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் கருப்பன் யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது.
நேற்று முன்தினம் கருப்பன் யானையை பிடிக்க வேண்டுமென வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை ஜோரகாடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
பொதுவாகவே கருப்பன் யானை இரவு நேரத்தில் மட்டுமே விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரம் ஆனதும் கருப்பன் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் பகலில் கருப்பன் யானை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு விடிய, விடிய கும்கி கபில்தேவ் உதவியுடன் வனத்துறையினர் கருப்பன் யானையை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கும்கி கபில்தேவ் உதவியுடன் விடிய, விடிய கருப்பன் யானையை விரட்ட தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பன் யானை இருப்பது பற்றி தெரிந்தால் பொதுமக்கள் தாங்களாகவே விரட்டாமல் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் கருப்பன் யானையை பிடித்து காலர் ஐ.டி. பொருத்தப்படும். பின்னர் அந்த யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனவே கருப்பன் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.