சிவகிரியில் வாலிபர் வெட்டிக்கொலை
- சிவக்குமாரை வெட்டிக்கொலை செய்தது அதேபகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பது தெரிய வந்தது.
- சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டணம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25).
டிப்ளமோ முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவர் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு 8 மணி அளவில் நண்பர்கள் அழைப்பதாக கூறி விட்டு வெளியே சென்றார்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் அவர் அப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் சிவக்குமாரின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கு ஓடிச் சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் சிவக்குமாரை வெட்டிக்கொலை செய்தது அதேபகுதியை சேர்ந்த செல்வக்குமார்(34) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவக்குமார் குடும்பத்தினருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே இடத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விரோதத்தில் செல்வக்குமாரை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை முருகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.