நீலகிரியில் தொடரும் போராட்டம்: தேயிலை விவசாயிகள் 4-வது நாளாக உண்ணாவிரதம்
- கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் தொடங்கிய தேயிலை விவசாயிகளின் போராட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
- இத்தலார், கடநாடு, கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் ஏராளமான தேயிலை விவசாயிகள் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கோர்ட்டும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் தேயிலை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எனவே நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் தொடங்கிய தேயிலை விவசாயிகளின் போராட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்றைய போராட்டத்தில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி அமர்ந்து இருந்தனர்.
இன்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. இத்தலார், கடநாடு, கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் ஏராளமான தேயிலை விவசாயிகள் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.