சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் திடீர் தீ
- உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
- தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகிலேயே கால்நடை மருத்துவமனையும் செயல்படுகிறது. இங்கு நாய், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை கண்ட கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரகுபதி விரைந்து வந்தார். தீ ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் அவர் கூறுகையில், இந்த அலுவலகத்தில் நான் உள்பட 5 ஊழியர்கள் பணி புரிந்து வருகிறோம். காலை 8.30 மணியளவில் அலுவலகத்தில் கரும்பு புகை வந்துள்ளதை கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு சில ஆவணங்கள் எரிந்துள்ளது. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.