உள்ளூர் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரெயில்: வருகிற 28-ந்தேதி முதல் இயக்கம்

Published On 2022-11-24 05:30 GMT   |   Update On 2022-11-24 05:31 GMT
  • ரெயிலில் தூங்கும் வசதி, 3-வது மற்றும் 2-வது ஏசி, முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
  • சபரிமலை சிறப்பு ரெயிலுக்கு புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை:

சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக ஐய்யப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அகல ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு முதன்முறையாக தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் வரை சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.

அதன்படி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை திங்கட்கிழமை தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்க்கிழமை தோறும் தாம்பரத்திலிருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

மொத்தம் 6 முறை இயக்கப்பட உள்ள இந்த ரெயிலில் தூங்கும் வசதி, 3-வது மற்றும் 2-வது ஏசி, முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த சபரிமலை சிறப்பு ரெயிலுக்கு புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 100 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சபரிமலை ரெயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் ரெயில் வழித்தடத்தை பயன்படுத்தி ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா ஆகிய ஐய்யப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி யாத்திரை செல்லலாம் என்பதால் ரெயில் பயணிகள் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News