சென்னை விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்கள் வெளியேற தனி பாதை
- செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
- ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக சென்னை மாநகர் முழுவதும் விளம்பர பதாகைகள், முக்கிய பிரதான சாலைகளில் ராட்சத பலூன்கள் வைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க பலவித பாதுகாப்பு உட்பட பல்வேறு வசதிக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் வீரர்களை கவனிப்பதற்கு என்று தனியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு என்று தனியாக இமிகிரேஷன் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை விரைவாக சோதனை செய்யப்பட்டு வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கியது முதல், விமான நிலையம் வெளியே செல்லும் வரைக்கும் அழைத்து செல்ல தனியாக ஆட்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அது மட்டுமின்றி அவர்களுக்கென்று தனி வழியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.