உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகளின் கடிதங்கள் குறித்து நியாயமான முறையில் பரிசீலனை செய்யப்படும்: சபாநாயகர் அப்பாவு

Published On 2022-10-12 15:06 IST   |   Update On 2022-10-12 15:06:00 IST
  • களக்காட்டில் இன்று வாழை ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மைய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இன்னும் ஓராண்டு காலத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காட்டில் இன்று நடந்த வாழை ஏல கூட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை ஏல மையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது போன்று கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் பேசும்போது ரூ. 6 கோடி மதிப்பில் வாழை ஏல மையம் களக்காட்டில் அமைக்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார்.

வாக்குறுதி தந்துவிட்டால் அதனை செயல்படுத்தும் அரசு திமுக அரசு. இன்று களக்காட்டில் வாழை ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மைய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டு காலத்தில் இந்த பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். விவசாயிகள் மீது அக்கறை கொண்ட அரசு தி.மு.க. அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தமிழக சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் தன்னை கலந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சபாநாயகர் பதில் அளிக்கையில், நான் இங்கு இருக்கிறேன். அந்த கடிதங்களை இன்னும் படித்து பார்க்கவில்லை, ஆளுக்கு 2 கடிதம் கொடுத்துள்ளனர். அவைகள் எனது பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும் கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News