ரோப் அறுந்து விழுந்து ஊழியர் பலியான கப்பல்.
காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து ரஷிய கப்பல் ஊழியர் பலி
- கிரேன் ரோப் அறுந்து ரஷிய கப்பல் ஊழியரான கான்ஸ் டன்ட்டைன் மீது விழுந்தது.
- மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறை முகத்தில் கடந்த 9ந் தேதி மாலை 5 மணிக்கு ரஷியாவில் இருந்து யூ.எச்.எல். பார்ச்சூன் கப்பல், வாகன உதிரி பாகங்கள் ஏற்றுவதற்காக காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது.
நேற்று மாலை தனியார் நிறுவன கம்பெனி மூலம் வாகன உதிரி பாகங்களை கிரேன் மூலம் சீனிவாசன் என்பவர் இயக்கி வந்தார். திடீரென கிரேன் ரோப் அறுந்து ரஷிய கப்பல் ஊழியரான கான்ஸ் டன்ட்டைன் மீது விழுந்தது. தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மற்றொரு ஊழியரான ரோமல் கேசசுக்கு வலது கால் தொடையிலிருந்து முழங்கால் வரை பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ரஷிய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.