உள்ளூர் செய்திகள்

குறைந்த விலைக்கு ஐ போன் தருவதாக கூறி தஞ்சை வாலிபரிடம் ரூ.7.14 லட்சம் மோசடி

Published On 2022-11-17 09:57 GMT   |   Update On 2022-11-17 09:57 GMT
  • பல தவணைகளாக ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 393 வரை வாலிபர் செலுத்தினார்.
  • அப்படியும் சொன்னப்படி எதுவும் நடக்காததால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை வாலிபர் உணர்ந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சையை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் புதிய ஐ போன் வாங்க முடிவு செய்தார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ரூ. 63 ஆயிரம் மதிப்புள்ள ஐ போனை ரூ.33 ஆயிரத்துக்கு தருகிறோம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதில் உள்ள லிங்கை திறந்தார்.

அதில் வாட்ஸ்அப் எண் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது உங்களுக்கு குறைந்த பணத்தில் ஐ போன் வேண்டுமென்றால் முன்பணமாக ரூ.13 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.13 ஆயிரம் கட்டினார். ஆனால் ஐ போன் வரவில்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு எனக்கு ஐ போன் வேண்டாம். நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள் என வாலிபர் முறையிட்டார்.

அதற்கு மர்மநபர், உங்களது பணம் மற்றும் ஐ போன் வேண்டுமென்றால் மீண்டும் பணம் செலுத்துங்கள் என கூறினார். இதனால் வேறு வழியின்றி குறிப்பிட்ட வங்கி கணக்கில் மீண்டும் அந்த வாலிபர் பணம் செலுத்தினார். தொடர்ந்து இவ்வாறாக பல தவணைகளாக ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 393 வரை வாலிபர் செலுத்தினார். அப்படியும் சொன்னப்படி எதுவும் நடக்காததால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை வாலிபர் உணர்ந்தார்.

இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News