அம்பத்தூர் தனியார் நிறுவனத்தில் ரூ.7 கோடி கையாடலில் 6 பேர் கைது
- கைதான 6 பேரும் கூட்டு சேர்ந்து தங்களது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் போலியான ஊழியர்கள் விபரங்களை உருவாக்கி அதில் அவர்களது வங்கி கணக்குகளை பதிவிட்டு சம்பள பணத்தை எடுத்து உள்ளனர்.
- மொத்தம் 93 வங்கி கணக்குகளில் செலுத்த கடந்த 3 ஆண்டுகளாக ரூ.6.95 கோடி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் கோபிநாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெரியார் நகரை சேர்ந்த விவேக்குமார், நாகப்பட்டினத்தை சேர்ந்த குமரவேல், வில்லிவாக்கத்தை சேர்ந்த தாமோதரன், சுரேஷ், ஆலங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார், திருவொற்றியூரை சேர்ந்த திலீப்குமார் ஆகிய 6 பேர் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக வேலைபார்த்து வந்தனர்.
அவர்கள் எங்களது நிறுவனத்தில் பணிபுரிவது போல் 129 போலி பணியாளர்களை உருவாக்கி தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ.6 கோடியே 95 லட்சம் வரை நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்து வந்தனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தினார்.
இதில் அந்த தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கைதான 6 பேரும் கூட்டு சேர்ந்து தங்களது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் போலியான ஊழியர்கள் விபரங்களை உருவாக்கி அதில் அவர்களது வங்கி கணக்குகளை பதிவிட்டு சம்பள பணத்தை எடுத்து உள்ளனர்.
மொத்தம் 93 வங்கி கணக்குகளில் செலுத்த கடந்த 3 ஆண்டுகளாக ரூ.6.95 கோடி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் அவர்கள் மோசடியில் சேர்த்த பணத்தை ஜாலியாக ஊர் சுற்றி உல்லாசமாக செலவு செய்து இருக்கிறார்கள்.
துபாய், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்று நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருக்கிறார்கள்.
இதேபோல் புனேயில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டையும் விமானத்தில் பறந்து சென்று பார்த்து ரசித்து வந்துள்ளனர். மிகவும் ஆடம்பரமாக செலவு செய்து இருக்கிறார்கள்.
கைதான 6 பேரும் அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஊதியம், பி.எப்.கணக்குகளை நிர்வகிக்கும் பணியில் இருந்து இருக்கிறார்கள்.
இதனால் அவர்களின் மோசடி வெளியில் தெரியாமல் 3 ஆண்டுகளாக நீடித்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது முன்னாள் ஊழியர் ஒருவர் தனது பி.எப். தொகையை கேட்டு அணுகி இருப்பதும் ஆனால் அந்த பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வின் போது தான் 6 ஊழியர்களும் போலியாக ஊழயர்களின் பட்டியலை சேர்த்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறிய முன்னாள் ஊழியர்களின் பலரது பி.எப். பணத்தையும் அவர்கள் குறி வைத்து சுருட்டி இருப்பதாக போலீ சார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மோசடியில் கைதானவர்களின் நண்பர்கள், உறவினர்க ளுக்கு உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.