தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகளை படம்பிடித்து போலீஸ் போல் மிரட்டி நகை-பணம் பறித்த கொள்ளையன் கைது
- காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்பதால் அவர்கள் நகை-பணத்தை இழந்தது குறித்து வெளியே கூறாமல் இருந்தனர்.
- சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பறிக்கும் நகைகளை அவன் தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள அடகு கடையில் விற்று உள்ளான்.
வண்டலூர்:
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் இளம் காதல் ஜோடிகள் தனிமையில் இருப்பது தொடர்ந்து வருகிறது.
அவர்களிடம் மர்ம வாலிபர் ஒருவர் போலீஸ் என்று கூறி மிரட்டி தொடர்ந்து நகை-பணம் பறிக்கும் சம்பவம் நடந்து வந்தது.
காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்பதால் அவர்கள் நகை-பணத்தை இழந்தது குறித்து வெளியே கூறாமல் இருந்தனர். மேலும் இதில் பெரும்பாலனோர் கள்ளக்காதல் ஜோடிகளாக இருந்ததால் அவர்கள் இதுபற்றி வெளியே சொல்லாமல் மறைத்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடிகளிடம் போலீஸ்போல் நடித்து நகை-பணம் பறிக்கும் மர்ம வாலிபர் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வாலிபர் குறித்து தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் (வயது39) என்பவன் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனது செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது நன்மங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று கொள்ளையன் சிவராமனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கைதான சிவராமன், கடலூரில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கூட்டாளிகளுடன் வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடலூருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அவன் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
அவன் மீது மாமல்லபுரம், தேவனாம்பட்டினம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, என பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு மட்டும் சுமார் 41 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பறிக்கும் நகைகளை அவன் தாம்பரம் மற்றும் கடலூரில் உள்ள அடகு கடையில் விற்று உள்ளான்.
அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சிவராமன் பாண்டிச்சேரி, பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைஎடுத்து தங்கி அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கரணை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கி சிறைக்குச் சென்ற சிவராமன் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி அன்று சிறையில் இருந்து வெளியில் வந்தான். பின்னரும் அவன் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து இருக்கிறான்.
வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஏப்ரல் 19-ந்தேதி அன்று காரில் இருந்த கள்ளக்காதல் ஜோடியை மிரட்டி ரூ.5 ஆயிரம், 11 பவுன் நகையும், மே 19-ந் தேதி வண்டலூர் பகுதியில் காரில் நெருக்கமாக இருந்த மற்றொரு கள்ளக்காதல் ஜோடியை வீடியோ எடுத்து அவர்களிடம் போலீஸ் என்று கூறி மிரட்டி நகைகளை பறித்து சென்று இருப்பதும் தெரியவந்தது.
கைதான சிவராமன் டிப்-டாப் உடையணிந்து மிரட்டும் தொணியில் பேசுவதால் அவர் போலீசாக இருக்கலாம் என பயந்து போன காதல் ஜோடிகள் நகை-பணத்தை பறிகொடுத்து உள்ளனர்.
அவனிடம் இருந்து 25 பவுன் நகை, ரூ. 5லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவனது கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளையன் சிவராமனிடம் நகை-பணத்தை இழந்த காதல் ஜோடிகளின் விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.