பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கூடலூர் சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு
- அதிவிரைவுப்படை போலீசாரும் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வனப்பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சோதனை சாவடிகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி:
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலமாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு முறை மற்றும் பாதுகாப்பு முறைகளை கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார்.
பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார்.
பின்னர் புலிகள் காப்பகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, புலிகளின் பாதுகாப்பு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை மாலை 4 மணிக்கு பிறகு கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூர் செல்லும் சாலை, தெப்பக்காடு வழியாக மசினகுடி செல்லும் சாலைகளில் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாளை மறுநாள் பிரதமர் முதுமலைக்கு வந்து செல்லும் வரை இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 எஸ்.பிக்கள் அடங்கிய போலீஸ் பாதுகாப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுதவிர அதிவிரைவுப்படை போலீசாரும் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வனப்பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் நீலகிரிக்குள் வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.
அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
இதுதவிர நீலகிரி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது தடையை மீறி டிரோன்கள் இயக்கி வருகிறார்களா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி, வாகன தணிக்கை தீவிரமாக நடக்கிறது. சோதனை சாவடிகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.