உள்ளூர் செய்திகள்

இலங்கையில் மக்கள் சக்தி வென்றது: போர்க்குற்றவாளிகள் தப்ப அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-07-09 10:50 GMT   |   Update On 2022-07-09 10:50 GMT
  • ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது.
  • ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இலங்கையை திவாலாக்கிய ராஜபக்சே குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபய தப்பியோடியுள்ளார்!

இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்சே குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்!

அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழர் இனப்படுகொலையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எந்த சிங்கள மக்களை வெறியேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்றார்களோ, அந்த சிங்கள மக்களாலேயே ராஜபக்சே குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது!

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது. ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர். இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படவில்லை. இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News