ராஜபாளையத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
- ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவலிங்கா புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவர் ஆலங்குளம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு ஆலங்குளத்தில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு அங்கு வந்து ஆறுமுகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் பரம குருபரன் என்பவரின் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த அதே கும்பல் அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க காசுகளை திருடினர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ராஜலட்சுமி 55 என்பவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 1500 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீழ ராஜகுல ராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.