உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் அருகே ரூ.9¾ லட்சம் சொத்துவரி கட்டாத தனியார் பள்ளிக்கு சீல்

Published On 2022-07-20 16:07 IST   |   Update On 2022-07-20 16:07:00 IST
  • அம்பத்தூர் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் சொத்து வரியை செலுத்தக் கோரி பலமுறை பள்ளி நிர்வாகத்திற்கு அறிவிப்பு கடிதம் வழங்கி அறிவுறுத்தினர்.
  • எனினும் தொடர்ந்து சொத்து வரியை செலுத்தாமல் இருந்தனர்.

அம்பத்தூர்:

அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பம் பகுதியில் சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 43 சொத்து வரி பாக்கி உள்ளது.

அம்பத்தூர் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் சொத்து வரியை செலுத்தக் கோரி பலமுறை பள்ளி நிர்வாகத்திற்கு அறிவிப்பு கடிதம் வழங்கி அறிவுறுத்தினர். எனினும் தொடர்ந்து சொத்து வரியை செலுத்தாமல் இருந்தனர்.

இதையடுத்து அம்பத்தூர் மண்டல அலுவலர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், வரி மதிப்பீட்டாளர்கள் புருஷோத்தமன், கேசவன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர். அவர்கள் சொத்து வரி செலுத்தாத பள்ளிக்கு சீல் வைப்பதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு மட்டும் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயலில் மாநகராட்சி அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பும் செய்தனர்.

Tags:    

Similar News