உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கர்ப்பிணி பெண்- பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் போலீசார்

Published On 2022-10-30 10:15 GMT   |   Update On 2022-10-30 10:15 GMT
  • பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார்.
  • தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

பவானி:

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் நெசவாளர் காலனி சேர்ந்தவர் கார்த்தி (26). இவரது மனைவி பிருந்தா (23).

இருவரும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராயபாளையத்தில் கார்த்தி, பிருந்தா தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த 27-ந்தேதி கார்த்தி திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று இரவு பிருந்தா ஒரு தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உணவு வரவழைத்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார்.

இந்நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் பிருந்தா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பிருந்தாவின் தாய்க்கும் அவரது கணவர் கார்த்திக்கும் தகவல் கொடுத்தார்கள். அவர்கள் பிருந்தா வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிருந்தா பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மனைவி உடலை பார்த்து கார்த்திக் கதறி அழுதார்.

இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையே பிருந்தாவின் தாய் சித்தோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதை பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிருந்தா எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News