உள்ளூர் செய்திகள்

ஜோஸ்வா ரஞ்சித்

ராஜபாளையத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர் சாவில் மர்மம் நீடிப்பு

Update: 2022-09-26 10:50 GMT
  • ஜோஸ்வா ரஞ்சித் 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
  • மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் ராஜபாளையத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சீனிவாசன் புது தெருவை சேர்ந்த பவுல் என்பவரது மகன் ஜோஸ்வா ரஞ்சித் (வயது 47). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இரவு வீட்டுக்கு வரும்போது மொட்டையடித்திருந்தார். அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று அவர் தூங்கி கொண்டிருந்த அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஜோஸ்வா ரஞ்சித்தின் தாய் பாக்கியம் (65) கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி அவர் அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் தெரிவித்து கதவை திறக்கும் படி கூறியுள்ளார். அதன்படி கதவை உடைத்து திறந்து பார்த்த போது ஜோஸ்வா ரஞ்சித் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோஸ்வா ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோஸ்வா ரஞ்சித்தின் தாய் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

எனவே அவரிடம் பேசிய நபர்தான் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்க வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் போலீசார் ஜோஸ்வா ரஞ்சித் மர்மமாக இறந்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோஸ்வா ரஞ்சித் 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் ராஜபாளையத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மல்லிகா உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதை தொடர்ந்து வேறு திருமணம் செய்யாமல் இருந்து வந்த ஜோஸ்வா ரஞ்சித் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த நிர்மலா என்ற பெண் போலீசை திருமணம் செய்துள்ளார்.

நிர்மலா ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் ஜோஸ்வா ரஞ்சித்தை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

போலீஸ்காரர் ஜோஸ்வா ரஞ்சித் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2-வது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருந்தபோதிலும் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதனால் போலீஸ்காரர் ஜோஸ்வா ரஞ்சித் சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News