உள்ளூர் செய்திகள்

சென்னை பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர்

Published On 2022-08-18 06:52 GMT   |   Update On 2022-08-18 06:52 GMT
  • லோகேஷ் மிரட்டி வந்ததால் இளம்பெண்ணின் தாய் கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
  • புகாரின் பேரில் இளம்பெண்ணை புகைப்பட எடுத்து மிரட்டிய லோகேஷ் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் கோகிலவாணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை:

சென்னை ஆவடியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி இணையதளம் மூலமாக வரன் தேடினர். அப்போது இளம்பெண்ணின் பெற்றோருக்கு கோவை பட்டணத்தை சேர்ந்த ஐ.டி.யில் ஊழியராக வேலை பார்க்கும் லோகேஷ் (28) என்பவரை பிடித்து போனது. அவரை தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

லோகேசின் பெற்றோரை தொடர்பு கொண்டு திருமணம் செய்து வைப்பது சம்பந்தமாக பேசினர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இளம்பெண்ணுக்கும் ,லோகேசுக்கும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

நிச்சயமான பெண்ணிடம் லோகேஷ் செல்போன் எண்ணை கொடுக்கும்படி கேட்டார். இளம்பெண்ணும் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் தானே என நினைத்து செல்போன் எண்ணை கொடுத்தார். 2 பேரும் செல்போன் மூலமாக காதலிக்க தொடங்கினர்.

இந்தநிலையில் லோகேஷ் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், அங்கு வரும்படி இளம்பெண்ணை அழைத்தார். அப்போது இளம்பெண் வர மறுத்து உள்ளார். அதற்கு அவரிடம் நான் உன்னை திருமணம் செய்ய போகும் வருங்கால கணவர், நான் அழைத்தால் நீ வர மாட்டாயா என கூறி அவரை அழைத்து உள்ளார்.

பின்னர் லோகேஷ் அழைத்த ஓட்டலுக்கு இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் சென்றார். அங்குள்ள வரவேற்பு அறையில் உள்ள நோட்டில் 2 பேரும் கையெழுத்து போட்டு விட்டு அறைக்கு சென்றனர். இதனை இளம்பெண்ணுக்கு தெரியாமல் லோகேஷ் புகைப்பட எடுத்துக்கொண்டார். பின்னர் அறையில் தங்கிய போது 2 பேரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு லோகேஷின் பழக்க வழக்கம் பிடிக்காமல் போனது. இதனால் அவர் லோகேசுடன் பேசாமல் இருந்தார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த லோகேஷ் ஓட்டலில் தங்கும் போது எடுத்த புகைப்படங்களை உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு அனுப்பி அசிங்கப்படுத்தி விடுவதாக கூறி மிரட்டினார். மேலும் புகைப்படத்தை அனுப்பாமல் இருக்க 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் வரதட்சணையாக தர வேண்டும் என கூறி மிரட்டி உள்ளார்.

இது குறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் திருமணத்தை நிறுத்தினர். தொடர்ந்து லோகேஷ் மிரட்டி வந்ததால் இளம்பெண்ணின் தாய் இது குறித்து கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இளம்பெண்ணை புகைப்பட எடுத்து மிரட்டிய லோகேஷ் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் கோகிலவாணி ஆகியோர் மீது நம்ப வைத்து பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News