உளுந்தூர்பேட்டையில் வியாபாரியை தாக்கிய பா.ம.க. துணை செயலாளர் கைது
- சத்யா, பக்கிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க உளுந்தூர்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருநாவலூர்:
உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 42). கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. துணை செயலாளர். அதே பகுதி கார்நேசன் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (52). ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பக்கிரி திருச்சி நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சத்யா, பக்கிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகவல் பரவி இருதரப்பினரும் அங்கு ஒன்று கூடினர். இதில் பக்கிரியை பா.ம.க. பிரமுகர் சத்யா தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் பக்கிரி புகார் அளித்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் சத்யா மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க உளுந்தூர்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.