உள்ளூர் செய்திகள்

பெருந்துறை அருகே மளிகை கடையில் பணம் திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2023-08-30 16:15 IST   |   Update On 2023-08-30 16:15:00 IST
  • பெருந்துறை மளிகை கடையில் பணம் திருடியதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
  • பெருந்துறை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). இவர் விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு சந்திப்பு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கள்ளன்காடு வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (25). தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

அருண் சம்பவத்தன்று பெருந்துறையில் நடன பயிற்சி மையம் நடத்தி வரும் தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இரவு நண்பருடன் நடன பயிற்சி மையத்தில் தங்கி உள்ளார். மோட்டார் சைக்கிளை பயிற்சி மையத்தின் வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

பின்னர் காலை எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருண் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிகோவில் பிரிவில் பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிள் எண்ணை பார்த்த போது அது தொலைந்து போன அருணின் மோட்டார் சைக்கிள் எண் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (34), கோவிந்தராஜ் (22), பூபதி (20) ஆகியோர் என்பதும், பெருந்துறை மளிகை கடையில் பணம் திருடியதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து பெருந்துறை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News