உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் அரசு பஸ்சை கடத்தி விபத்தை ஏற்படுத்தியவர் கைது

Published On 2024-03-24 05:33 GMT   |   Update On 2024-03-24 05:33 GMT
  • அரசு பேருந்தை கடத்தி சென்று விபத்தை ஏற்படுத்திய மர்ம நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து நாள்தோறும் 67 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் இரவு நேரங்களில் பணிமனையில் இடம் இல்லாத காரணத்தால் சில பேருந்துகள் பணிமனையின் வெளி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் அறந்தாங்கியிலிருந்து திருவாடனை செல்லக்கூடிய பேருந்து நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வழக்கம் போல் பணிமனையின் வெளி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் பேருந்தை இயக்கி அங்கிருந்து கடத்தி சென்றுள்ளார். அறந்தாங்கியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இராமநாதபுரம் மாவட்டம் வட்டானம் எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருக்கையில் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் முனியசாமி (வயது 37) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்தை கடத்தி சென்ற மர்ம நபர், தாம் தான் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேன் என்று கூறி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அறந்தாங்கி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதால் அவருக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போக்குவரத்து பணிமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை கடத்தி சென்று விபத்தை ஏற்படுத்திய மர்ம நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News