டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
- டாஸ்மாக் கடை திறந்தால் அந்த வழியாக சென்று வர முடியாது.
- டாஸ்மாக் கடை தொடங்க கூடாது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் நாளை புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் சேலம் ஓமலூர் பிரதான சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. சுமார் 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மக்கள், கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை தொடங்க கூடாது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்ததது. இதனால் அங்கு, பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார், கைது செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் சந்து கடைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக் கடை திறந்தால் அந்த வழியாக சென்று வர முடியாது. குடித்து விட்டு ரோட்டில் தூங்குவார்கள். இதனால் பெண்கள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.