உள்ளூர் செய்திகள்

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு- கலெக்டர் ஆய்வு

Update: 2022-08-08 11:08 GMT
  • நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை சேதம் அடைந்தது.
  • சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுவதால் மீனவர்கள் அந்த வழியாக கடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

மாமல்லபுரம்:

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் படகுகளில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும மீனவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நெம்மேலி குப்பத்தில் உச்சகட்டமாக கடல் அலைகள் முன்னோக்கி வந்து மணற்பரப்புகளை அரித்ததால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் இடிந்து விழுந்தன.

20 அடி தூரத்திற்கு கடல் முன்னோக்கி வந்து கரைப்பகுதியை ஆக்கிரமித்து விட்டதால் படகுகளை நிறுத்த இடம் இல்லாமலும், பிடித்து வரும் மீன்களை கருவாடாக உலர வைக்கவும் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள வெங்கட்டம்மன் கோவிலும் கடல் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. திடீர், திடீரென 50 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுவதால் மீனவர்கள் அந்த வழியாக கடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

இடிந்து விழுந்த சிமெண்டு சாலையின் ஒவ்வொரு பகுதியும் அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் அந்த பகுதிகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில் மீனவர்கள் தவித்து வருகின்றனர். தற்போது கடல் 20 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து, சிமெண்டு சாலையை சேதப்படுத்தி விட்டதால் தங்கள் படகுகளையும், மீன்பிடி வலைகளைவும் வைக்க இடம் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து கடல் அரிப்பு குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று நெம்மேலி குப்பத்திற்கு சென்று கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் தமிழக அரசு உடனே இந்த பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைத்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் இதுகுறித்து உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்று நெம்மேலி குப்ப மீனவ பஞ்சாயத்தார்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கலெக்டருடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி, திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன், நெம்மேலி ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரமணிசீமான், ஊராட்சி துணைத்தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Similar News