உள்ளூர் செய்திகள்

திருவேற்காடு பகுதியில் சாலையில் மாடுகளை சுற்றவிட்டால் அபராதம்

Published On 2022-07-19 13:35 IST   |   Update On 2022-07-19 13:35:00 IST
  • வாகனங்களில் செல்லும் போது மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
  • திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதில் மாடுகளை பாதுகாப்பாக அதற்குரிய இடத்தில் கட்டிப் போட்டு வளர்ப்பதில்லை. இதனால் பெரும்பாலான மாடுகள் சாலைகள் மற்றும் தெருக்களில் குறுக்கே படுத்துக் கொண்டும், சுற்றி திரிந்தும் வருகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகனங்களில் செல்லும் போது மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இது குறித்து திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில் மாடு வளர்ப்பவர்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகள் சாலைகளில் படுத்துக் கொண்டும், சுற்றி திரிந்து கொண்டும் உள்ளன. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளை விக்கின்றன.

மாடு வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை சாலைகளில் திரியாமல், தங்களது கட்டுப்பாட்டில் வளர்க்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில், சாலைகளில், தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு தொந்தரவோ, சிரமமோ ஏற்பட்டால் நகராட்சி சார்பில் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்ப டைக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News