உள்ளூர் செய்திகள்

குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு: மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

Published On 2023-07-31 09:45 GMT   |   Update On 2023-07-31 09:45 GMT
  • ரத்தம் சொட்ட சொட்ட வேலம்மாள் அங்கிருந்து ஓடிச்சென்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார்.
  • தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள்(வயது 54). இவர்களது 2 குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆறுமுகம் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் வீட்டை விற்பதற்காக பத்திரம் கேட்டு வேலம்மாளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அரிவாளால் வேலம்மாளின் தலையில் வெட்டினார்.

உடனே ரத்தம் சொட்ட சொட்ட வேலம்மாள் அங்கிருந்து ஓடிச்சென்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆத்திரம் தீராத ஆறுமுகம் வீட்டில் இருந்த பீரோ மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுகுடிப்பதற்காக வீட்டை விற்பதற்கு பத்திரம் கேட்டு, கிடைக்காத ஆத்திரத்தில் மனைவியை வெட்டியதோடு சொந்த வீட்டுக்கே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News