உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு: அ.தி.மு.க.வினர் சாலை மறியலால் பரபரப்பு

Published On 2023-10-24 10:24 IST   |   Update On 2023-10-24 10:24:00 IST
  • மர்மநபர்கள் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தினர்.
  • சிலையின் வலது கையை உடைத்து, இடுப்பு பகுதியை நொறுக்கி இருந்தனர்.

திருச்சி:

திருச்சி லால்குடி அருகே ரெட்டி மாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் 2003-ம் ஆண்டு 5 அடி உயரம் கொண்ட எம்.ஜி.ஆர்.சிலை நிறுவப்பட்டது.

இந்த சிலைக்கு அவரது பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின் போது நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் அந்த எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தினர். சிலையின் வலது கையை உடைத்து, இடுப்பு பகுதியை நொறுக்கி இருந்தனர்.

இதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரெண்டு அஜய் தங்கம் மற்றும் காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்து தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும் போது, சமூக விரோத செயல்களுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இழிசெயலுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே பிரச்சனைகளை மேலும் தவிர்ப்பதற்காக அங்கே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News