உள்ளூர் செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொலை

Published On 2023-04-07 06:51 GMT   |   Update On 2023-04-07 06:51 GMT
  • ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
  • நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.

முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.

இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.

நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News