செஸ் ஒலிம்பியாட் போட்டி- மாமல்லபுரத்தை மேம்படுத்த அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு
- வெளிநாட்டு செஸ் வீரர்களின் சுற்றுலா பகுதியாக கடற்கரை கோயில்.
- 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி 44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இங்கு வரும் வெளிநாட்டு செஸ் வீரர்களின் 'சுற்றுலா பகுதியாக' கடற்கரை கோயில், அர்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, ஐந்துரதம், புலிக்குகை ஆகிய புராதன சின்னங்களை சர்வதேச செஸ் கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர்.
அதனால் மாமல்லபுரம் நகரை மேம்படுத்தும் பணிக்காக, 2022-23 மூலதன மானிய திட்டத்தின் கீழ் 8 கோடி ரூபாய் நிதியை அரசு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒதுக்கீடு செய்தது., இத்திட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவில் செய்து முடிக்க தனித்தனி டென்டர்கள் விடப்பட்டது. இதில் 60 சதவீத பணிகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். மீதி 40சதவீத பணிகளை பேரூராட்சித் துறையே மேற்கொள்ள முடிவு செய்து, நேற்று மதியம் கவுன்சிலர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.
மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டு கவுன்சிலர்களில் 11 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் 14-வது வார்டு ம.தி.மு.க கவுன்சிலர் துர்காசினி, அவசர ஒப்பந்த பணிகள் குறித்து செயல் அலுவலர் எந்த ஆலோசனையும் செய்யாமல் கையெழுத்தை மட்டுமே கேட்பதாக கூறி வெளிநடப்பு செய்தார்.
10 நிமிடம் மட்டுமே நடந்த கூட்டத்தில், சாலைகள் பராமரிப்பு, பூங்கா அமைத்தல், குளங்களை தூர்வாரி சுத்தம் செய்தல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற ஒப்பந்த பணிகளை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமே மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று முதல் அதற்கான பணிகளும் தொடங்கியது.