உள்ளூர் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு- மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை

Published On 2023-03-01 10:23 IST   |   Update On 2023-03-01 10:23:00 IST
  • கடந்த 2020-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானைக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டது.
  • கடந்த 4 நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த நிலையில் யானை உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டது. 26 வயதான இந்த யானை கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பார்வதி யானைக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருவிழாவின்போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானைக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தாய்லாந்து மருத்துவ குழுவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் யானை பார்வதிக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து யானைக்கான சிகிச்சை குறித்து காணொலி மூலம் ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.

இதற்கிடையே கோவில் யானை பார்வதிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக யானை நடைபயிற்சிக்கு செல்லவில்லை.

தொடர்ந்து யானைக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த நிலையில் யானை உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News