உள்ளூர் செய்திகள்

மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று செயல்பட்டால் இளைய வக்கீல்களுக்கும் வெற்றி நிச்சயம்- தலைமை நீதிபதி பேச்சு

Published On 2023-08-05 14:53 IST   |   Update On 2023-08-05 14:53:00 IST
  • தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டால் இந்தியாவிலேயே சேலம் நீதிமன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது.
  • ஜூனியர் வழக்கறிஞர்கள் சீனியர் வழக்கறிஞர்களிடம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சேலம்:

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக ரூ.59 கோடி மதிப்பீட்டில் 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

விழாவில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா புர்வாலா பங்கேற்று புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சேலம் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு புதிதாக கட்டப்பட உள்ள 16 நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டால் இந்தியாவிலேயே சேலம் நீதிமன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது. நீதிமன்றங்கள் முன்பு எல்லாம் காகிதத்தால் எழுதுகின்ற தீர்ப்பாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் தற்போது காகிதம் இல்லாமல் செயல்படும் நிலைமை வந்துள்ளது. எனவே அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ஜூனியர் வழக்கறிஞர்கள் சீனியர் வழக்கறிஞர்களிடம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். கடினமாக உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். எப்பொழுதும் வேலை என்று இருக்காமல் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட வேண்டும். அப்போது மகிழ்ச்சி ஏற்பட்டு வேலை செய்யும் போது எந்தவித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக பணிகள் செய்திட முடியும்.

இவர் அவர் பேசினார் .

இதில் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் கமிஷ்னர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சேலம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் முத்தமிழ் செல்வன், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சங்க உறுப்பினர் அய்யப்ப மணி மற்றும் வக்கீல்கள் செல்வ கீதம், எஸ்.ஆர் அண்ணாமலை, பழனி குமார், மதன் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

சேலம் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டல்பவிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News