பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது- புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்க்க மனு அளிக்கலாம்
- குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
- கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11-ந் தேதி) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் தென்னேரி, திருப்பெரும்புதூர் வட்டத்தில் கொளத்தூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.
முகாம் நடைபெறும் இடங்களில், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.