உள்ளூர் செய்திகள்

கமுதி அருகே மான் வேட்டையாடிய முதியவர் கைது

Published On 2023-03-26 12:00 IST   |   Update On 2023-03-26 12:01:00 IST
  • மான் வேட்டை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
  • மான் வேட்டையில் முதியவர் மட்டும் ஈடுபடுவது இயலாத செயல். ஒரு சிறிய மான்கூட 10 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கும்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெருஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, கோவிலாங்குளம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களில் குண்டாடு படுகையில் ஏராளமான மான்கள் உள்ளன.

இந்த நிலையில் நெருஞ்சிப்பட்டி கிராமம் கருவேலங்காட்டு பகுதிக்கு இரைத்தேடி வந்த ஒரு மான் வேட்டையாடப்பட்டதாக கோவிலாங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவிலாங்குளம் போலீசார் நெருஞ்சிப்பட்டியை சேர்ந்த கண்ணாயிரம் (வயது 70) என்பவரை பிடித்தனர்.

அவர் வேட்டையாடிய மானை சமைத்து கொண்டிருந்தபோது மப்டி உடையில் போலீசார் சென்று அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் வந்திருப்பது போலீசார் என்பது தெரியாமல் மான் இறைச்சியை சமைத்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசார் என்று தெரிந்ததும் தான் சமைத்து கொண்டிருப்பது ஆட்டு இறைச்சி என்று கூறி உள்ளார்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த ஒரு கிலோ இறைச்சியை போலீசார் பறிமுதல் செய்து சாயல்குடி வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அது ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மான் வேட்டை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு மான் வேட்டையில் ஈடுபட்ட அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இந்த மான் வேட்டையில் முதியவர் மட்டும் ஈடுபடுவது இயலாத செயல். ஒரு சிறிய மான்கூட 10 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கும். தற்போது ஒரு கிலோ மான் இறைச்சிதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News