உள்ளூர் செய்திகள்

கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டதா? என ஆய்வு செய்ய தேர்வு குழுவை மாற்றி அமைக்கலாம்- மதுரை ஐகோர்ட்

Published On 2023-01-02 15:54 IST   |   Update On 2023-01-02 15:54:00 IST
  • கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை.
  • கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

மதுரை:

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20-2-2021 அன்று வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாத பல நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் அந்த அமைப்பின் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் 2019-2020-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் இன்று வழங்கினர்.

அப்போது 2019-20 ஆம் ஆண்டு தகுதியானவர்களுக்கு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது தொடர்பான தேர்வு குழுவை மாற்றியமைக்கவும், விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags:    

Similar News