அரிசிராஜா யானையை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு
- யானை 50 வீடுகளை இடித்து தள்ளியதோடு, அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
- யானை நடமாட்டம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான வாழவயல், தேவாலா அட்டி, பொன்னூர், நாடுகாணி, முண்ட குன்னு, பாடந்துறை, புளியம்பாறா பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசி ராஜா யானை சுற்றி திரிந்தது.
இந்த யானை 50 வீடுகளை இடித்து தள்ளியதோடு, அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
மேலும் வாழவயல், புளியம்பாறை பகுதிகளில் 2 பெண்களையும் மிதித்து கொன்றது.
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அரிசிராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனை தொடர்ந்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சீனிவாச ரெட்டி பிறப்பித்தார்.
உடனடியாக நீலகிரி மாவட்ட மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மேற்பார்வையில் 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அரிசி ராஜா யானையை கண்காணிக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டனர்.
மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், டிரோன் கேமிரா மற்றும் பரண் அமைத்தும் யானையை கண்காணித்து வந்தனர்.
ஆனால் அரிசி ராஜா யானை சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்ததுடன், கண்காணிப்பையும் மீறி அரிசி ராஜா யானை மேலும் 4 வீடுகளை சேதப்படுத்தியது.
இந்த நிலையில் அரிசி ராஜா யானை புளியம்பாறை அடுத்த நீடில் ராக் காப்பிகாடு பகுதிக்கு வந்தது.
அப்போது அங்கு பரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் அவர்களது உத்தரவின் பேரில் அங்கு இருந்த கால்நடை டாக்டர்கள் 2 மயக்க ஊசியை செலுத்தினர். இதில் சில மீட்டர் தூரம் நடந்து சென்ற யானை மயங்கி விழுந்தது.
உடனடியாக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அரிசி ராஜா யானையின் கால்களில் கயிறுகட்டி, கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர் யானையை முதுமலை வனப்பகுதியில் அடர்ந்த காட்டிற்குள் விட்டனர். இதனால் வாழவயல், புளியம்பாறை உள்ளிட்ட பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் அந்த யானையை வனத்திற்குள் விடாமல் கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானையை பிடிக்க 18 நாட்களாக இரவு, பகல் பாராமல் போராடிய வனத்துறையினருக்கு வனத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கிைடயே கிராமங்களில் அட்டகாசத்தில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட அரிசி ராஜா யானையை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிராஜா யானை பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரேடியோ காலர் பொருத்தும்பட்சத்தில் யானை எங்கு செல்கிறது. யானை நடமாட்டம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.