உள்ளூர் செய்திகள்

கோர்ட்டு வளாகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி

Published On 2023-12-11 08:23 GMT   |   Update On 2023-12-11 08:23 GMT
  • வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
  • கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் ஊத்துமலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மகன் தமிழ்வாணன் (வயது 35).

இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தமிழ்வாணன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்தபோது லாரியில் இருந்து கெமிக்கலை இறக்கி கொண்டிருந்தபோது அவரது உடலில் கெமிக்கல் பட்டு காயம் அடைந்தார்.

இதையடுத்து அவரால் மேற்கொண்டு லாரி ஓட்டும் தொழிலை செய்ய முடியவில்லை. இதனால் தமிழ்வாணன் விபத்து இழப்பீடு கேட்டு தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் வழக்கை விரைந்து விசாரித்து இழப்பீடு வழங்குமாறு தமிழ்வாணன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாணன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக கோர்ட்டுக்குள் வந்துள்ளார்.

பின்னர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்த அவர் தனது 2 குழந்தைகளையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு கோர்ட்டு வளாகத்தில் மனைவியுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் பார்த்து ஓடி வந்து 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது அவர், நான் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ.6 லட்சம் வரை கடனாளியாக உள்ளேன். வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

பின்னர் அவர்களை குழந்தைகளுடன் அழைத்துச் சென்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News