திருவள்ளூரில் பலத்த மழை: குடிசைவீடு இடிந்து தொழிலாளி பலி
- பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உயிருக்கு போராடிய முனியம்மாள் மற்றும் சுமித்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள சிற்றம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவன்(வயது67), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள்(60). இவர்கள், பேரன் சுமித்துடன்(14) குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு 3 பேரும் வீட்டில் தூங்கினர்.
கடந்த 3 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது. பலத்த மழை காரணமாக தேவனின் குடிசைவீட்டின் மண் சுவர் முழுவதும் நனைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை பலத்த சத்தத்துடன் குடிசை வீடு திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த தேவன், அவரது மனைவி முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் மீது விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த தேவன் சம்பவ இடத்திலேயே பலியானார். முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது குடிசை வீடு இடிந்து தேவன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய முனியம்மாள் மற்றும் சுமித்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான தேவனின் உடல் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.