தேனி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி.
- வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கி சாரல் மழையாக பல இடங்களில் இடைவிடாமல் பெய்த நிலையில் இரவில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது.
குறிப்பாக போடி, பெரியகுளம், தேவதான ப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சோத்துப்பாறை அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வராக நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி. வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடி. வரத்து 182 கன அடி. திறப்பு 40 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.94 அடி. வரத்து 469 கன அடி. திறப்பு 30 கன அடி.
தேக்கடி 17, போடி 62.6, வைகை அணை 5.4, சோத்துப்பாறை 72, மஞ்சளாறு 70, பெரியகுளம் 4, வீரபாண்டி 12.4, அரண்மனைபுதூர் 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளிதரன் அறிவித்துள்ளார்.