ஊட்டியில் கனமழை- கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு
- சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பூங்கா மற்றும் உணவு விடுதிக்குள் மழைநீர் புகுந்தது.
- ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் மழை பெய்ய தொடங்கியது. பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, சூட்டிங் மட்டம், தொட்டபெட்டா, லவ்டேல், எம்.பாலாடா உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் ஊட்டி-காந்தல் இடையே செல்லும் நகர பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பூங்கா மற்றும் உணவு விடுதிக்குள் மழைநீர் புகுந்தது. ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கட்டிடம் கட்ட மண் அகற்றப்பட்ட இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்து. இதனால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது.
எம்.பாலாடா பகுதியில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கனமழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.